தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சி என்று சொன்னால் இந்தப் படத்திற்காக இயக்குனர், நடிகர் பார்த்திபன் எடுத்திருக்கும் ஒரு படத்தில் ஒரே ஒருவர் என்ற இந்த முயற்சியைப் பாராட்டியே ஆக வேண்டும்.
படம் முழுவதும் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே நடிக்கும் படம் தான் இந்த ஒத்த செருப்பு சைஸ் 7. மற்ற கதாபாத்திரங்களின் முகம், உடல் எதுவுமே காட்டப்படவேயில்லை. அவர்களின் குரலும், அவர்கள் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் சில காட்சிக் குறிப்புகளும் மட்டுமே படத்தில் இருக்கின்றன.
அதை கவனமாகக் காட்சிப்படுத்தவதற்காக இயக்குனர் பார்த்திபன் இன்னும் அதிக கவனத்துடன் யோசித்திருக்க வேண்டும். அதை திரையில் சரியாகவும் கொண்டு வந்திருக்கிறார். குரல்களில் மட்டுமே வரும் கதாபாத்திரங்களை நாமும் உணர வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு மொபைல் பேசி அழைப்பு வந்தால், அந்த மொபைல் போனை மட்டும் காட்டுவது, பெண் டாக்டர் வந்தால் அவருடைய ஹேன்ட் பேக்கைக் காட்டுவது என சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து செய்திருக்கிறார்.
சரி, ஒருவரே நடிக்கும் படத்தின் கதை என்ன?. ஒரு கொலை செய்துவிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் செக்யூரிட்டி வேலை பார்க்கும் பார்த்திபனை காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வருகிறார்கள். அவரை விசாரிக்க டெபுடி கமிஷனரே வருகிறார். அவர் விசாரணையில் பார்த்திபன் ஒரு கொலையை மட்டும் செய்யவில்லை, அடுத்தடுத்து மேலும் சில கொலைகளை செய்திருக்கிறார் என்பதை பார்த்திபன் சொல்லச் சொல்ல மட்டுமே அறிகிறார்கள். அத்தனை கொலைகளை பார்த்திபன் செய்ய என்ன காரணம் என்பதை அவராகவே விவரித்து, நடித்து சொல்லி நமக்கும் புரிய வைக்கிறார்.
ஒரு விசாரணை அறை, காவல் நிலையத்தின் உட்பகுதி, கொஞ்சம் வெளிப்பகுதி என படம் முழுவதும் காவல் நிலையத்திலேயே நடந்து முடிகிறது. அது முற்றிலும் பார்வையாளனுக்கு வித்தியாசமாக இருந்தாலும், சினிமா என்பது பல கதாபாத்திரங்கள் இணைந்து நடித்து நம்மை ரசிக்க வைக்கும் ஒரு ஊடகமாகவே நூறாண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.
அப்படியிருக்கையில் ஒரே ஒருவர் மட்டுமே அதிக நேரம் பேசிக் கொண்டேயிருப்பது ஒரு கட்டத்தில் சோர்வைத் தருகிறது. கொஞ்சம் புரிந்தும், புரியாமலும் பேசுவதும் கவனமாகக் கவனிக்காமல் விட்டால் அந்த ஒருவர் என்ன சொல்கிறார் என்பது புரியாமலேயே போய்விடும்.
தன்னுடைய பேச்சாலேயே சுற்றி என்ன நடக்கிறது, தனக்கு என்ன நடந்தது என்பதை நாமும் உணரும்படி உணர்ச்சி பூர்வமாய் கதை சொல்கிறார் பார்த்திபன். அவர் சொல்லும் நடந்தவற்றை நாமே காட்சிகளாக கற்பனை வடித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். நடிகராகப் பல பரிமாணங்களைக் காட்டுகிறார் பார்த்திபன். அதைப் பார்வையாளனுக்கும் கடத்துகிறார்.
ஒரு விதத்தில் ஓரங்க நாடகம் மாதிரியும், தனி நடிப்பு மாதிரியும் கூட இந்தப் படத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், தான் மட்டுமே நடித்தாலும் அதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா மாட்டார்களா என்ற சந்தேகம் இல்லாமல் முயற்சித்துதான் பார்ப்போமே என்ற அசட்டுத் தைரியம் பார்த்திபனுக்கு வந்ததில் பெரிய ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஏற்கெனவே, சில வித்தியாசமான கதாபாத்திரங்களை தமிழ் சினிமாவில் கொடுத்தவர்தானே.
கதை சொல்லும் விதம், ஒரே இடமாக இருந்தாலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது. ஒரு கொலைக்கும் அடுத்த கொலைக்கும் காட்சி ரீதியில் ஒரு தொடர்பை ஏற்படுத்தி சொல்வது சுவாரசியமாக உள்ளது. மனைவியைப் பற்றிச் சொல்லும் போதெல்லாம் ஒலிக்கும் இளையராஜாவின் பாடல்கள் தனி ஈர்ப்பைத் தருகிறது. காட்சிகளிலும், சில வசனங்களிலும் தனி ரசனையுடன் முத்திரை பதிக்கிறார்.
பின்னணி இசை, ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், ஒலி வடிவமைப்பாளர், என பலரும் பார்த்திபனுக்கு பக்கபலமாகவே இருந்திருக்கிறார்கள்.
படத்தில் சொல்ல வரும் கருத்து ஏற்புடையதாக இல்லை. தான் மனைவி மீது அதிக பாசம் வைத்திருந்தும், மாற்றுத் திறனாளி மகன் இருந்தும் தன்னை விடுத்து மனைவி பலருடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதைக் காட்டுவது கருத்து ரீதியாக இடிக்கிறது.
இன்னும் எத்தனை படங்களில் தான் பெண்களை மோகத்திற்கு அடிமையானவர்களாகவும், வசதியான வாழ்க்கையை மட்டும் விரும்பும் பெண்களாகவும் காட்டுவார்கள்.
தனக்கு துரோகம் செய்துவிட்டு அடிக்கடி வெளியே போகும் மனைவி எப்படியெப்படி எல்லாம் அவருக்கு நெருக்கமானவர்களுடன் இருந்தார், என்பதை விளக்கிச் சொல்லும் காட்சிகள் எரிச்சலூட்டுகிறது.
ஆரம்ப காலத்தில் பெண்களை உயர்த்தி வைத்து பல படங்களைக் கொடுத்த பார்த்திபன் கடைசியாக எடுத்த சில படங்களில் பெண்களைத் தவறு செய்பவர்களாகவும், மோசமானவர்களாகவும் சித்தரித்து வருகிறார்.
ஒரு குறிப்பிட்ட மேல்மட்ட ரசிகர்களுக்கான படமாக இது அமைந்து விடுமோ என்ற சந்தேகம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை
Rating: 3/5 overall: good performance, new try and applause for effort.watchable worth to appreciate.
5 out 4 because it's unbelievable story and content. one of good story good content and good camera work.
ReplyDeleteOk sir as one of it's kind we could definitely appreciate it and spread to others
ReplyDeletePost a Comment